ஞான ஸாரம் 2 – நரகும் சுவர்க்கமும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                          2-ஆம் பாட்டு

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன்  தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடியிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப்பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்
பதவுரை:

விளக்கவுரை:
நரகும் சுவர்க்கமும் என்ற சொற்கள் துன்பத்தையும் இன்பத்தையும் குறிக்கின்றன. “துன்பமும் இன்பமும்” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில் “இன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்” என்ற இடத்திற்கு உணரச் செய்கையில் “சுக துக்கங்கள்” என்று உணர சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே நரகு என்றால் துன்பம் என்றும் சுவர்க்கம் என்றால் இன்பம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பரபக்தியுடையவர்களுக்கு எது துக்கம்? எது சுகம்? என்பதை மேல் தொடர் விவரிக்கிறது. நாண்மலராள் கோன் (பெரிய பிராட்டியாருக்குத் தலைவன்) அவனைப் பிரிதல் துன்பம் என்றும் பிரியாமை (அவனோடு கூடியிருத்தல்) இன்பம் என்றும் சொல்வர். பரபக்தி என்றால் பிரிவில் ஆற்றமாட்டாமை, கூடிடில் ஆற்றாயிருத்தல். இதற்கு உதாரணம் பின்வருமாறு.

R

ஸ்ரீராமாயணத்தில் பெருமாள் (இராமன்) காட்டிற்கு எழுந்தருளும்போது பிராட்டி நானும் கூட வருவேன் என்று சொல்ல அதற்குப் பெருமாள் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்குமுண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம் என்றும், அரண்மனையில் இருப்பது இன்பம் என்றும் அருளிச் செய்தார். அதைக் கேட்ட பிராட்டி, “இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல; ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம்; உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பது துன்பமாகும்; இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக; தமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ளவேணும்; அது தவறில்லையே; உம்மைப் போலே நாம் அளந்து அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும்” என்று சொன்னாள். இதற்கு இராமன் “நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே. இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான். அதற்கு பிராட்டி “நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப்பாரும்” என்று கூறினாள். இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.

இங்கு ஒரு வேதாந்தவிசாரம். சீதை, இராமனைப் பார்த்து உம்முடன் கூடியிருந்தால் சுகம் என்றும் உம்மைவிட்டுப் பிரிந்தால் துக்கம் என்றும் கூறினாள். இது அவள் அளவுக்குப் பொருத்தமாகயிருக்கும். இதே வார்த்தையை ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்துச் சொல்வது முறையற்றது. பிராட்டி பகவானையே இன்பமாகக் கொண்டிருப்பவள். ஜீவாத்மாக்களோ பகவானையும் பிராட்டியையும்சேர்த்து இன்பமாகக் கொண்டிருப்பவர்கள். அதனால்பிராட்டிக்கு “ஏகாயணை” என்றும், ஜீவாத்மாக்கள் “மிதுனாயர்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏகாயணை பகவானொருவனையே இன்பமாகக் கொண்டிருப்பவள். ஜீவாத்மாக்கள் மிதுனாயனர் என்று சொல்லப்படுவதால் பகவானையும் பிராட்டியையும் சேர்த்து இருவரையும் இன்பமாகக் கொண்டிருப்பவர்கள். பிராட்டிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் உண்டான வேறுபாட்டை இவ்வாறு பிரித்து அறியவேணும்.

“நாண்மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்” – பிராட்டியோடு கூடிய பகவானைப் பிரிதலும், பிராட்டியோடு கூடின பகவானைப் பிரியாமையும் துன்பமும் இன்பமும் என்று சொல்லப்படுகிறது. இளையபெருமாள் ராமனைப் பார்த்து “சீதை எப்படி உன்னைப் பிரிந்தால் வாழமாட்டாளோ அது போல நானும் உன்னைப் பிரிந்தால் வாழமாட்டேன்” என்று தன்னைப் பிராட்டிக்குச் சமமாகக் கூறிக் கொண்டுள்ளார். இங்கு பிரிவுத் துயர் பொறுக்க மாட்டாமைக்கு மட்டும் இருவரும் சமம் என்று கருத்தாகும்.

அவ்வாறன்றி ராமனை மட்டும் பற்றி நிற்கும் சீதையைப் போல் என்று பொருள் கொள்ளலாகாது. இளையபெருமாளுக்குப் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் நிலையே இன்பமாகக் கொள்ள வேணும். ஆகவே தான் காட்டுக்குப் புறப்படும் பொழுது “நீயும் சீதையும் மலைதாழ்வரைகளில் உலாவும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் உங்கள் இருவருக்கும் நான் எல்லா அடிமைகளும் செய்யவேணும். அதற்காகவே என்னை அழைத்துச் செல்லவேணும்” என்று இலக்குவன் கூறியுள்ளதால் பகவான், பிராட்டி இருவருக்கும் சேர்த்து செய்யும் அடிமையே ஆன்மாக்கள் எல்லோருக்கும் உரிமையாகும்.

துரிசற்று – துரிசு – குற்றம். அற்று – அது இல்லாமல் அதாவது பகவானையும் பிராட்டியையும் பிரிந்தால் துன்புற்றும் அவர்களைக் கூடினால் இன்புற்றும் அமைந்த பக்தி உண்டானால் அதை (தகுதியுடைமையாக) அதிகாரி விசேஷணமாகக் கொள்ளவேணும். அதாவது சாப்பிடுவதற்கு பசி எப்படி அவசியமோ அதுபோல பகவானை அனுபவிப்பதற்கு பக்திவேணும். இந்த பக்தி சாதனமாக ஆகாது. பக்தியை உபாசகர்கள் சாதனமாகக் கொள்ளுகிறார்கள். சரணாகதர்கள் சாதனமாகக் கொள்ளமாட்டார்கள். சாதனமாகக் கொண்டால் அதுகுற்றமாகும். இங்கு துரிசற்று என்பதால் பக்தியை சாதனமாகக் கொள்ளும் குற்றம் இல்லாதவர்கள் என்று பொருள்.

“சாதகம் போல் நாதன் தனதருளே பார்த்திருப்பர்” – அதாவது மழைநீரையல்லது பருகாத சாதகப்பறவை விடாயினால் நாக்கு ஒட்டினாலும் மழைநீரையே பார்த்திருக்கும். அதுபோல இவ்வாத்மாவுக்கு வகுக்கப்பட்ட பகவானுடைய அருளையே அவனை அடைவதற்குச் சாதனமாக அறுதியிட்டு அவ்வருளையே பார்த்திருத்தல் குற்றமற்ற அடியார் குணம் “துணியேனினி நின்னருளல்லது நின்னருளே புரிந்திருந்தேன்” என்ற ஆழ்வார் பாசுரங்களாலும் இக்கருத்தைக் காணலாம்.

“கோதிலடியார்குணம்” – அடியார் என்பதற்கு வேறுவேறு பயன்களிலும், வேறுவேறு சாதனங்களிலும் தொடர்பு கொண்டிருக்கும் குற்றமில்லாதவர் என்று பொருள். தங்களுடைய அடிமை இலக்கணத்திற்கேற்ப பகவானையே ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்போனும் அவனே. அடையவேண்டியவன் ப்ராப்தா அடைய வழியாய் இருப்பவன் ப்ராபகன். அடைந்த பிறகு இவ்வாத்மாவுக்கு பகவானே வகுக்கப்பட்ட தலைவன் என்பது உண்மை. ஆகையால் இப்பாட்டில் முன்னடியால் “பயன் பகவானே” என்ற கருத்தும் பின்னடியால் “சாதனமும் பகவான்” என்ற கருத்தும் தோன்றச் சொல்லப் பட்டுள்ளது. இப்படியிருப்பதே கோதிலடியார் குணம் என்று உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *