ஞான ஸாரம் 18- ஈனமிலா அன்பர்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                 18-ஆம் பாட்டு:

முன்னுரை:

பகவான், தன்னிடம் பக்தியுடையவராய் இருந்தாலும் (ஆத்ம ஞானம் இல்லாத) தெய்வ சிந்தனை இல்லாமல் முகம் திரும்பிச் செல்லும் உலக மக்களோடு தொடர்பற்றவர்களுக்கே எளியவனாய் இருப்பதால் அத்தகைய உலகியல் மக்களோடு தொடர்புடையவர்களுக்கு மிகவும் அரியனாய் இருப்பான் என்னும் கருத்தை அனைவரும் அறிய இதில் அருளிச் செய்யப்படுகிறது.

Dhruva-Vishnu-and-Garuda-thumb

“ஈனமிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வண்ணத்தாலும் – தானறிய
விட்டார்க் கெளியன் விடாதார்க் கறவரியன்
மட்டார் துழாயலங்கல் மால்”

பதவுரை:

மட்டு ஆர் தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் திருத்துழாய் மாலையுடைய
மால் திருமால்
ஈனமில்லாத அன்பர் தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும் பக்தியுடையவர்கள் ஆனாலும்
எய்திலா பகவானுக்கு எதிரிகளான
மானிடரை கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும் பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன் மிகவும் அரியனாய் இருப்பான்

விளக்கவுரை:

ஈனமிலா அன்பர் என்றாலும் – ஈனமாவது பொல்லாத் தன்மை இதை ‘பொல்லா அரக்கனை என்று இராவணன் செயல்களுக்கு அடைமொழி கொடுத்து சொன்னது காண்க. “முன்பொலா இராவணன்” என்று திருமங்கையாழ்வார் பாசுரமும் கூறுகிறது. “தீய புந்திக் கஞ்சன்” என்று கம்சனுடைய பொல்லாங்கும் பெரியாழ்வாரால் சொல்லப்பட்டது. ஆக, இராவணன், கம்சன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் பொல்லாங்கு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது. இத்தகைய பொல்லாங்கு இல்லாதவர்கள் என்பதாம். தன் திருவடிகளில் பழுதற்ற பக்தியுடையவர்கள் என்று தேறி நின்றது. கீதையில் “மனதில் வேறு எதையும் கருதாமல் என்னையே கருதும் பக்தனுக்கு நான் அடையத் தகுந்தவன்” என்று கூறியவாறு. அத்தகைய பக்தியுடையவர்களை ‘ஈனமிலா அன்பர்’ என்று கூறியவாறு.

எய்திலா மானிடரை – பகவானிடம் சிறிதளவு கூட நெருங்காத மனிதர்களை மனிதப் பிறப்பு இறைவழிபாட்டிற்கென்றே படைக்கப்பட்டதொன்று. அவ்வழிபாட்டைச் செய்யாதவர்கள் “விலங்கொடு மக்களனையர்” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விலங்காவார். இக்கருத்தை “ஆன் விடையேழன்றடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவரல்லர் என்று என் மனத்து வைத்தேனே” என்று திருமங்கையாழ்வாரும், செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமாவையேன்” என்று பூதத்தாழ்வாரும் இறைவனை மறந்தவர்கள் மனிதரல்லர் என்று கூறியதைக் காணலாம். “பேரறிவாளர்களான ஆழ்வார்கள் இகழும் வண்ணம் பகவானை மதியாது திரிகின்ற பெரும் பாவிகளான அற்ப மனிதர்களை” என்று இத்தொடருக்குப் பொருள்.

இதனை நம்மாழ்வார் ‘யாதானும் பற்றி நீங்கும் விரதமுடையார்’ என்று அறிவிலிகளான மானிடரைக் கூறுவார். இங்கு “எய்திலா” என்றில்லாமல் “எய்திலராம்” என்று பாடம் கொண்டால் பகவானுக்கு எதிரிகளான மானிடரை என்று பொருள் கிடைக்கிறது. இதைத் திருவள்ளுவர் “ஏதிலார் குற்றம் போல” என்ற குறளில் ‘பகைவர்’ என்ற பொருளில் ஏதிலார் என்ற சொல்லைக் கூறியது காணலாம்.

எல்லாவண்ணத்தாலும் – அதாவது உடனுறைதல், பொருள்கள் கொடுத்துக் கொள்ளுதல், (பேச்சு) அளவளாவுதல் மற்றும் உலகியல் பழக்கங்கள் எல்லாவற்றாலும் என்று பொருள்.

தானறிய விட்டார்க்கு – தாங்களும் பிறரும் அறிந்த அவ்வளவோடு நில்லாமல் இதயத்திற்குள்ளிருக்கும் இறைவன் அறியும்படி விடவேண்டும். அவ்வாறு விட்டவர்களுக்கு இறைவன் எளியவனாயிருப்பான் ‘உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியும் அவனல்லவா’ இத்தகைய அவன் அறியும்படிக்கு மூடர்களின் தொடர்பை அறவே விடவேண்டும் என்பது கருத்து.

தானறிந்த வைணவத்துவமும், வைணவத்துவமல்ல. நாடறிந்த வைணவத்துவமும் வைணவத்துவமல்ல. நாராயணனறிந்த வைணவத்துவமே வைணவத்துவம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் என்ற எடுத்துக்காட்டு உரையில் கூறப்பட்டுள்ளது.

விடாதார்க்கு அறவரியன் – அவ்வாறு விடாதவர்களுக்கு அருகில் நெருங்கவும் முடியாதவாறு மிகவும் எட்டாக்கையனாய் இருப்பான். இதை நம்மாழ்வார் ‘அடியார்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்று கூறினார். இதனால் பக்தர்கள் உலகியல் மக்களோடு உறவாடலாகாது என்பது கருத்து.

மட்டார் துழாயலங்கல் மால் – பகவானின் திருத்தோள்களிலும் திருமுடியிலும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமால் என்பது. பகவானுடைய திருமேனியில் உராய்தலால் மிக அழகு பெற்றுத் தேன் பெருகுகிறது திருத்துழாய். இத்தகைய தேன் பெருகும் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் என்று பொருள். திருத்துழாய் மாலை திருமாலின் மேன்மையைக் குறிப்பதற்கு அடையாளமாகும். “மட்டார் துழாயலங்கல் மால், ஈனமிலா அன்பர் என்றாலும் எய்திலா மானிடரை எல்லா வண்ணத்தாலும் தானரிய விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்” என்று கொண்டு கூட்டுக.

1 thought on “ஞான ஸாரம் 18- ஈனமிலா அன்பர்

  1. Pingback: ஞான ஸாரம் 19- நல்ல புதல்வர் | dhivya prabandham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *