ஞான ஸாரம் 12- மாறாயிணைந்த மருத

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                          12-ஆம் பாட்டு:

முன்னுரை:

வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும் திருமகள் மணாளனான இறைவன் அச்செல்வத்தை விரும்பி ஏற்கமாட்டான் என்று கூறுகிறார் இப்பாட்டில்.

krishna-tied-to-grinding-mortar

“மாறாயிணைந்த மருத மிறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியை வேறாக
உள்ளாதா ரொண்ணிதியை யீந்திடினும் தானுகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்”

பதவுரை:

மலர் மடந்தை கோன் திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த தன்னிடம் பகைகொண்டு சேர்ந்து நின்ற
மருதம் இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற முறிந்து விழும்படி
தவழ்ந்த தவழ்ந்து போன
சேறார் சேற்றில் அலர்ந்த
அரவிந்தம் செந்தாமரை போன்ற
வேறாக சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார் நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான் பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான் மகிழ்வுடன் ஏற்கமாட்டான்

விளக்கவுரை:

மாறாயிணைந்த மருதம் – தன்னிடம் பகை உணர்வோடு இடைவெளி இல்லாமல் நெருங்கிருந்த மருத மரங்கள் ‘எமளார்ச்சனம்’ என்ற பெயர் உடைய வகைகள் (இறத் தவழ்ந்த) முறிந்து விழும்படி தவழ்ந்து போன என்று பொருள்.

கண்ணபிரானைத் தொட்டிலில் இட்டு யசோதை யமுனை நீராடப் போனாள். அப்பொழுது அவன் பசியினால் அழுதான். முலைப்பால் கொடுக்கும் தாய் அருகில் இல்லை. சீற்றத்தினால் திருவடிகளை நிமிர்ந்து உதைத்தான். கண்ணனைக் கொல்வதற்காக அசுரன் மறைந்திருந்த வண்டி அவனை அழிக்க வந்தது. அப்போது தன் சிறு பாதத்தால் உதைத்தான். அவ்வளவில் அவ்வண்டி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது என்பது முன் வரலாறு. அது போல இங்கு சாபத்தினால் இரட்டையாய் இணைந்துள்ள எமளார்ச்சனம் என்ற மருத மரங்களும் இவனுடைய உராய்தலால் கீழே சாய்ந்தன. அதாவது, கண்ணன் வெண்ணையைக் களவிலே அமுது செய்தான், ஊரார் காணவே அவனை உரலிலே கட்டிப் போட்டுவிட்டு வேலையிலே ஈடுபட்டாள் யசோதை. குழந்தைத்தனத்தால் உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் தன்னை இணைத்திருந்த மருத மரங்களின் நடுவே தவழ்ந்து நுழைந்தான். உரல் தடைப்பட்டது. பலத்து இழுக்கும் பொழுது அவன் ஊர்ந்து சென்ற தொடைகள் உராய்தலால் இரட்டை மருத மரங்களும் முறிந்து விழுந்தன, மருத மரத்தில் மறைந்திருந்த அசுரர்கள் பலியானார்கள். எமளார்ச்சனர்கள் கம்சனுக்கு உதவியாக மருத மரவடிவில் மறைந்து நின்று கண்ணனைக் கொல்ல எண்ணினார்கள். அவனாலேயே பலியானார்கள். பிறர்க்காகக் கண்ணனைப் பகைத்துக் கிட்டினாலும் கண்ணனாலே அழிக்கப்பட்டார்கள். ஆகவே, பிறர்க்காக எதிர்த்தாலும் அவர்களும் கண்ணபிரானால் அழியும்படி ஆவார்கள். எதிரிகள் யாரானாலும் அவர்களை அழிப்பது கண்ணன் இயல்பு என்பது கருத்து. இயற்கையான தாமரைக் குளத்தில் அலர்ந்த செந்தாமரை போலே சிவந்த திருவடிகள்.

சேவடி என்று திருவடியின் சிவப்பைச் சொன்ன இடத்தில் மற்றும் உண்டான அலர்த்தி, குளிர்ச்சி, அழகு, நறுமணம் இவை எல்லாவற்றையும் ஏற்புளிக் கோடல் என்ற உத்தியால் சேர்த்துக் கொள்ள வேணும். இக்கதையைச் சொல்ல வந்த பராசரமுனிவர் கண்ணன் மருத மரங்கள் நடுவே தவழ்ந்து போனபோது அவை முறிந்து விழுகின்ற ஒசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அவ்வழகிய பார்வையாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களின் அழகைக் கட்டுரைத்தார். இக்கதையை இப்பாடலில் கூறிய அருளாள மாமுனிவர் கண்ணன் தவழ்ந்து போகிற போது மருத மரங்களை முறித்திட்டுப் போன திருவடிகளில் அழகைக் கட்டுரைக்கிறார் என்பது மணவாளமாமுனிகள் உரை.

“பொருந்திய மாமரு தின்னிடை போய வெம்
பெருந்தகாய், உன் கழல் காணியே பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே”                             என்றும்
(திருவாய்மொழி – 3-8-10)

“போனாய் மாமருதின் நடுவே என் பொல்லாமணியே” என்றும் ஆழ்வாரும் அனுபவிக்க ஆசைப்பட்டது மருதத்தின் நடுவே போன திருவடிகளை அன்றோ?

வேறாக உள்ளாதார் – வேறுபடுத்தி எண்ணாதவர்கள்.

‘அதாவது வேறுபயன் எதிலும் சிறிதும் தொடர்பின்றி இத்திருவடிகளே நமக்கு மேலான பயன் என்று நினையாதவர்கள்’ என்று கருத்து. அதாவது கண்ணபிரான் மருதமரமாயுள்ள எமளார்ச்சனர்கள் கையில் அகப்படாமல் தன்னைத் தானே காத்து நமக்குத் தன்னை அனுபவிக்கும்படி தந்ததால் அவன் திருவடிகளே அடையத் தகுந்த மேலான பலன்’ என்று எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு கிடப்பதன்றோ அடியவரானவர்க்குத் தருவதாகும். அவ்வாறு இருக்க வேண்டியதை விட்டுவிட்டு மனதை வேறு வேறு பயன்களில் ஈடுபடுத்தும் அவர்கள் என்பதாம்.

ஒண் நிதியை ஈந்திடினும் – ஒண்மை – அதாவது சீரிய அளவற்ற நிதியைக் கொடுத்தாலும்

தான் உகந்து கொள்ளான் மலர் மடந்தை கோன் – ‘தான் திருவுக்கும் திருவாகிய செல்வனாகையால் எல்லாம் நிரம்பப் பெற்றவன். குறையொன்றுமில்லாதவன். ஆகவே மேலே சொல்லப்பட்டவர்கள் மிக்க பெருநிதியைக் கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்கமாட்டான்’ என்பது பொருள். அவன் குறையுடையவனாய் இருந்தாலன்றோ கொடுக்கிற பொருளை பெருநிதி என்று அவாவுற்று ஏற்பான்! இதை அவனிடம் சொல்ல முடியாது அல்லவா ? மேலும் கொடுப்பவரது நெஞ்சின் தூய்மையைப் பார்த்து ஏற்கும் பெருமான்  அன்றோ அவன். ‘ஆகையாலே தன்னிடம் பக்தியில்லாது வேறுபயனை விரும்புவார் கொடுப்பதை மகிழ்ந்து ஏற்கமாட்டான்’ என்பதாம். ‘மகிழ்ந்து ஏற்க மாட்டான்’ என்றதால் ‘தலைவிதியே’ என்று ஏற்பானாகத் தெரிகிறது. இறைவன் எல்லோராலும் பற்றப் படுவனாதலால் அவன் யார் கொடுப்பதையும் ஏற்க வேணுமே! கடமைக்காக ஏற்பானே அன்றி மகிழ்ந்து ஏற்க மாட்டான் என்பது இதன் குறிப்புப் பொருள். பெற்றோர்கள், நற்குணமுடைய குழந்தைகள் கொடுப்பதை ஏற்பது போல, அக்குணமில்லாதவர்கள் கொடுப்பதையும் ஏற்க வேண்டுமல்லவா அதுபோல என்பதாம்.

Leave a Comment