ஞான ஸாரம் 11- தன் பொன்னடி அன்றி

ஞான ஸாரம்

முந்தையபாசுரம்

                                                              11-ஆம் பாட்டு:

10341639_946710622009229_2282824162362598681_n

முன்னுரை:

கீழே சொன்ன இரண்டு பாடல்களில், “ஆசிலருளால்” என்ற பாடலில் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்தில் திருமகள் மணாளனான இறைவன் விருப்பத்துடன் இருக்கும் இருப்பையும், “நாளும் உலகை” என்ற பாடலில் இறைவனைப் பற்றிக் கொண்டே வேறு ஒன்றை எண்ணுவாரது உள்ளத்தில் இறைவன் துன்பத்துடன் இருக்கும் இருப்பையும் அருளிச் செய்தார். இப்பாட்டில் தன் திருவடிகளில் வேறு பயனைக் கருதாது பக்தி செய்யும் உண்மையான பக்திமான்கள் மிக அன்புடன் கொடுக்கும் பொருள் மிகச் சிறியனவாக இருந்தாலும் இறைவன் அச்சிறிய அளவான பொருளையும் மிகப் பெரியதாக நினைத்து ஏற்பான் என்னும் கருத்தை அருளிச் செய்கிறார். “தினைத்துணை நன்றி செய்யினும் பனைத் துணையாகக் கொள்வார் பயன் தெரிவார்” என்று பொய்யா மொழியும் இக்கருத்தைக் கூறுகின்றது. உலகளந்த நிலையை வருணிக்கையில் “உயர்ந்தவர்க்கு உதவிய உதவியொப்பவே” என்றான் கம்பன்.

“தன் பொன்னடி அன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்திட்டது அணு வெனிலும் – பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மார்மாக் கொண்டல் நிகர் மால்”

பதவுரை:

விரையார் நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர் மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால் திருமால்
தன்பொன்னடியன்றி தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் வேறு பயன்களில்
தாழ்வு செய்யா ஈடுபாடு கொள்ளாத
அன்பர் பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் பொன் மிளிரும்
மேருவாய் பொன் மலையாய்
கொள்ளும் ஏற்றுக் கொள்வான்

விளக்கவுரை:

தன் பொன்னடியன்றி – தன் என்பதற்கு இறைவன் எக்காரணமும் இல்லாமல் இயல்பாகவே அனைத்து ஆன்மாக்களுக்கும் தலைவனாக இருப்பவன் என்று பொருள். பொன்னடி அன்றி என்பதற்கு மிக அழகாகவும் விரும்பத்தக்கதாகவும் உள்ள திருவடிகளை அல்லாமல் என்று பொருள். இங்கு தன்னடி என்று கூறுவதால் இறைவனுடைய திருவடிகள். ஆன்மாக்கள் அனைவருக்கும் அவை உரிமையுடையன என்பதும் “பொன்னடி” என்று கூறுவதால் அவ்வடிவினுடைய உயர்வும் இன்பமும் சொல்லப்படுகின்றன.

மற்றொன்றில் தாழ்வு செய்யாவன்பர் – கீழே சொன்ன இறைவன் திருவடிகள் ஆன்மாக்கள் அனைவருக்கும் உரிமையுடையதாய் மிகவும் இனிமையுமாய் இருப்பதால் அத்திருவடிகளை யொழிய வேறு பயனில் ஈடுபடாத அன்பை உடையவர் என்று பொருள். மற்றொன்று என்ற சொல் செல்வம், ஆன்மா அனுபவம் முதலிய வேறு பயன்களைக் குறிக்கிறது. தாழ்வாவது:- ‘தாழ்ச்சி’ அதாவது ஈடுபாடு என்பதாம்.

இங்கு ‘சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது’ என்ற பாடலில் ‘தாழ்ச்சி’ என்பதற்குப் பொருள் சொல்வது போல இங்கும் பொருள் கொள்ள வேணும்.

அதாவது ‘தாழ்ச்சி மற்றும் எங்கும் தவிர்த்து’ என்ற இடத்தில் ‘உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்த்து’ என்பதையும் ஒப்பு நோக்குக. ஆக இவ்வாறு, “பகவானைத் தவிர வேறு பயன்களில் ஈடுபடாத பேரன்பர்கள்” என்று பொருள்.

உகந்திட்டது:– உகப்பு – களிப்பு (மகிழ்ச்சி) – இட்டது கொடுத்தது மகிழ்ந்து கொடுக்கும் பொருள்.

அடிமை செய்வதில் இரண்டு வகை உண்டு. சாஸ்திரக் கட்டளைப்படி செய்வது ஒன்று. அதாவது அடியவனாயிருப்பவன். தொண்டே செய்து வரவேணும் என்பது. மற்றொன்று, அன்பின் மிகுதியால் தொண்டு செய்வது. உதாரணம், மனைவி கணவனுக்கு செய்யும் தொண்டு கற்புடைமை என்னும் சாஸ்திரக் கட்டளையாகும். ‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி’ என்றார் திருவள்ளுவர். கணவன் மனைவிக்கு செய்யும் (சேவகம்) பணிகள் அன்பின் மிகுதியால் செய்ததாகும். அன்பர்கள் இறைவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாம் கட்டளை என்று செய்யாமல் அன்பின் மிகுதியால் செய்ய வேண்டுமென்பது மேலோர் கொள்கை. இதை, “உகந்து பணி செய்வது” என்பர்.

“உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம்
பெற்றேன், ஈதேயின்மை வேண்டுவதெந்தாய்”

(திருவாய்மொழி-10-8-10)

என்ற இடத்தில் “உகந்து பணி செய்து” என்று ஆழ்வார் கூறியதைக் காண்க.

இவ்வாறு அடியவர் அன்புடன் அர்ப்பணிக்கும் பொருள் அணுவெனினும் மிகச்சிறிய அளவில் இருந்தாலும்.

பொன் பிறழும் மேருவாய் கொள்ளும் – அதாவது பொன் மயமாய் விளங்கும் மகாமேருவைப் போல மிகப் பெரியதாக நினைத்து ஏற்றுக் கொள்வான் என்பதாம். இறைவன் வறியவனாக இருந்தால் இவன் கொடுத்ததை ஏற்று நிரம்பியவனாவான். அதனால் இவன் கொடுக்கும் பொருள் மிகச் சிறிதளவாக இருந்தால் அதை அவன் ஆதரிப்பான். இதை ‘அல்பத்தனம்’ என்று உலகம் கூறும். இவ்வாறின்றி, இறைவன் குறை ஒன்றுமில்லாத நிறைவாளனாக இருப்பதால் குறையை நிரப்பிக்கொள்ள வேண்டிய நிலை அவனுக்கில்லை. ஆகையினால் அன்பர் தனக்கு அன்பினால் கொடுக்கும் பொருள் சிறிதளவாயினும் அதை பொன்மலை போல் பெரிதாக மதித்து ஏற்பான் என்பது பொருள். இவ்வாறு ஏற்பவன் எத்தகையவன் என்றால்:-

விரையார் துழாயலங்கல் மாரிமாக் கொண்டல் நிதர்மால் – ‘நறுமணம் நிறைந்த திருத்துழாய் மாலையாலே அழகுறத் திகழ்பவன். நீருண்ட காளமேகம் போன்று இருக்கிற காரார்ந்த திருமேனி அழகுடையவன். ‘இத்தகைய திருமால்’ என்று பொருள். விரை-நறுமணம் அலங்கல்-மாலை, மாரி-மழை, மா-பெரிய, கொண்டல்-மேகம் என்று பொருள் காண்க.

கருத்து: இவ்வாறு நிறைவாளன் என்று கூறியதால் வேறு பயனை விரும்பாமல் தன்னிடம் மனதை வைத்தவர்களுக்குத் தன்னுடைய அழகான அணிகலங்கள் பூண்ட வடிவழகைக் காட்டி எப்பொழுதும் அவ்வடிவழகையே அனுபவித்து பக்தியை வளர்ப்பவன்’ என்று கொள்க. விரையார் துழாய் அலங்கல், மாரிமாக்கொண்டல் நிகர்மால், தன் பொன்னடியன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா அன்பர் உகந்திட்டது அணுவெனினும் பொன் பிறளும் மேருவாய்க் கொள்ளும் என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

Leave a Comment