ஞான ஸாரம் 14- பூதங்கள் ஐந்தும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     14-ஆம் பாட்டு:

முன்னுரை:

உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா? என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” என்று விடை கூறி எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் நாயகன் திருவடிகளே புகலாய்க் காண்பீர்கள்! என்னும் உண்மை கூறப்படுகிறது இப்பாடலில்.

satya

 “பூதங்கள் ஐந்தும் பொருந்து உடம்பினாற் பிறந்த
சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம் – பேதங்கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண்”

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும் நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால் உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள் சாதிகள்
நான்கினொடும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம் சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர் என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும் அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன் லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே எம்பெருமானுடைய திருவடிகளே
சரண் புகலாகும் என்று
காணும் அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

“பூதங்களைந்தும் பொருந்து உடலினாற் பிறந்த” :
“மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயக்கிநின்ற
அஞ்சுசேர் ஆக்கை …..”      

-என்று திருமங்கை ஆழ்வாரும்

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ்வைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”  

-என்று திருவள்ளுவரும் சொன்னபடி,   மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினுடைய கூட்டுறவே உடம்புகளாக உண்டாகி இருக்கின்றன. இவ்வாறு கூறுவதால் ஆன்மாவுக்கும், உடலுக்கும் தொடர்பில்லை என்பதை நன்கு உணரலாம். மேலும் உடல், பேதை, குழவி, பால்யம், இளமை முதுமை முதலிய மாறுபட்ட தோற்றங்களைக் கொண்டதாய் நிலை இல்லாததாகவும், பழிப்புக்கு இடமாகவும் இருக்கிறது. இதனால் ஆன்மாவுக்கு இத்தகைய உடல் தாற்காலிகமாக ஏற்பட்டது என்று புலனாகிறது.

சாதங்கள் நான்கினொடும் – அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சொல்லப்படும் சாதிகள் நான்கு. சாதங்கள் என்பதற்கு சாதிகள் என்று பொருள். இந்நான்கு சாதிகளும் மேலே சொன்ன ஐம்பூதங்களால் ஆகிய உடலினால் ஏற்பட்டவைகளே.

நான்கினொடும் சங்கதமாம் பேதம் கொண்டு – இவ்வாறான நான்கு சாதிகளோடு சேர்ந்திருக்கிற பற்பல சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணமாயிருப்பன. அந்தணர் முதலிய சாதியைப் பற்றிக்கொண்டு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்று வேறுபாடுகள் வருகின்றன. உடலைப் பற்றி வருகின்ற இவ்வாறான வேறுபாடுகள் எவ்வளவோ கூறலாம். இக்கருத்தை பரிமேலழகர் நால்வகை நிலைத்தாய் வர்ணம் தோறும் வேறுபாடுடைமையின் என்று கூறினார்.

என்ன பயன் பெறுவீர் – இவ்வேறுபாடுகள் கொண்டு என்ன பயன் அடையப் போகிறீர்கள் என்று உலகோரை நோக்கிக் கேட்கப்படுகிறது. பயன் எதுவுமில்லை என்பதுவே இதற்கு பதிலாகும். இதனால் உணர்த்தப்படும் குறிப்புப் பொருள் “யான்” “எனது” என்னும்  குற்றங்களுக்குக் காரணமாயிருப்பதால் சாதி வேறுபாடுகள் ஆன்மாவுக்குக் கேடுகளையே விளைவிக்கும் என்பதாம்.

இங்கு ‘என்ன பயன் கெடுவீர்! என்று பாடபேதம் கொண்டு அதற்கு ‘கெடுவீர்கள்’ என்று விளி வேற்றுமையாக்கி அருகிலிருப்பவரை நோக்கிக் கூறுவதாகப் பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண் – ‘எவ்வுயிர்க்கும்’ என்றதால் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற சிறப்புக்கேற்ப இன்னார் இனியார் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் மணாளன் திருவடிகளே புகலாகக் காண்பீர்களாக. ‘அனைத்துயிருக்கும் அவன் திருவடிகளே புகல்’ என்று கூறுவதால் அனைத்துயிர்களும் அவன் திருவடிகளைச் சார்ந்திருப்பதால் பேதங்கள் ஒன்றுமில்லை ஆகையால் பேதம் சொல்வது எல்லாம் உண்மை இல்லை. இறைவனடியார் என்று சொல்வதே எல்லா உயிர்களுக்கும் நிலைநின்ற தன்மையாம். இதுபற்றியே

“பொதுநின்ற பொன்னங்கழலே தொழுமின்
முழு வினைகள் முன்னங்கழலும் தொழுமின்”        -திருவந்தாதி – 2369ம் பாட்டு

என்றார் பூதத்தாழ்வார். இங்கு “பொதுநின்ற பொன்னங்கழல்” என்று இறைவனுடைய திருவடி அனைவருக்கும் பொது என்று கூறப்பட்டது. இது பற்றியே வைணவத் திருக்கோயில்களில் வழிபாட்டுக்கு வரும் அனைவர் தலைகளிலும் திருவடி நிலையை (சடாரி) வைப்பதைப் பார்க்கிறோம்.

Leave a Comment