ஞான ஸாரம் 4 – மற்றொன்றை எண்ணாதே

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                4-ஆம் பாட்டு:

543439_636314269732920_1530777401_n

“மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”

பதவுரை:

மற்றொன்றை                                           -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே                                                 -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு                                              -திருமாலுக்கு
ஆட்செயலே                                              -அடிமை செய்வதில்
இது உற்றது                                                -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று                                                            -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து                                         -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல்             -அடையப் பெற்ற இப்பெரும்பயனுக்கு மேல்
பேர் உளதோ                                              -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார்                                             -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு                                        -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும்பேறு                                                 -பெறுதர்கரிய பயனாவார்

முன்னுரை:

கீழ்ச்சொன்ன மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்ட சுருக்கமான கருத்து. ஊன உடல் முதல் பாட்டில் – துவய மந்திரத்தில் முதற்பகுதியில் சரணாகதியினுடைய சிறப்புத்தன்மை சொல்லப்பட்டது. சரணாகதி செய்வதற்குக் காரணம் பிறவித் துன்பம் தாங்கமாட்டாமை. அத்துன்பம் தாங்க மாட்டாத நிலை பரபக்தியின் அடிப்படையில் உண்டாகும் என்ற கருத்தை “நரகும் சுவர்க்கமும்” என்ற இரண்டாம் பாட்டிலும், அதையும் காட்டிலும் பிரிவில் உயிரே போகும் நிலையான பரமபக்தியின் நிலை “ஆனையிடர் கடிந்த” 3வது பாட்டிலும் கூறப்பட்டன. இனி த்வய மந்திரத்தின் பிற்பகுதியால் கூறப்படுகிற லட்சியத்தின் எல்லையான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து வேறு பயன்களின் (தொடர்புகளை) ஆசாபாசங்களை அறவே விட்டு ஆன்மாவின் அடிமை இலக்கணத்திற்கு ஏற்புடைய தொண்டுகளில் உறுதி பூண்டவர்களுடைய சிறப்புத் தன்மை இந்த நான்காம் பாடலில் கூறப்படுகிறது.

விளக்கவுரை:

மற்றொன்றை எண்ணாதே:- அதாவது கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல். இதுவே ஒருவன் அடைய வேண்டிய லட்சியத்தின் எல்லை. இதுக்கு மேல் எதுவுமில்லை. அத்தகைய கைங்கர்யத்திற்குப் புறம்பானது ஒன்றை லட்சியமாகக் கருதாமல் என்பது இதன் பொருள். புறம்பான லட்சியமாவது, இவ்வுலக இன்பமும் சொர்க்கமும் முதலிய பரலோக இன்பமும் ஆன்மானுபவமாகிற கைவல்ய மோட்ச அனுபவமும், இம்மூன்றும் கைங்கர்யத்திற்குப் புறம்பானவை. “ஆன்மானுபவம்” என்பது தன்னைத்தானே அனுபவித்தல் ஆகும். அதாவது ஆன்மா உடல் தொடர்பின்றியிருத்தலாம். ஆன்மாவின் தன்மை இயல்பாக இன்ப வடிவாயிருப்பது. ஆகவே எந்த உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தால் அது தன் தன்மையான இன்பமே வடிவாயிருக்கும். அதுவே மோட்சம் என்று சிலர் கூறுவர். அது பகவத் கைங்கர்யத்தை பயனாகக் கொள்ளும் கொள்கைக்கு வேறுபட்டதாகையால் “மற்றொன்று” என்று கூறப்பட்டது. இவற்றின் பெயர் சொல்வதும் விரும்பாமையால் மற்றொன்று என்று மறைத்துச் சொல்லப்பட்டது. “விரும்பாதே” என்று கூறாமல் “எண்ணாதே” என்று கூறியது. நினைத்தால் அன்றோ விரும்புவது. அவ்வாறே ஒரு பொருளாக நினையாததால் “எண்ணாதே” என்று சொல்லப்பட்டது. இவ்வாறன்றி இவ்வுலக இன்பத்தையும் பரலோக இன்பத்தையும் ஆன்மா அனுபவத்தையும் விரும்புபவர்கள் பகவத் கைங்கர்யத்தின் சுவையறியாதவர்களாக ஆவர். பகவத் கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல் சுவையற்றதாயும் கீழ்த்தரமாயுமன்றோயிருப்பவை.

மாதவனுக்கு ஆட்செயல்:- என்பதாலே அவர்கள் இருவருக்கும் செய்யும் அடிமையே ஒருவரால் பெற வேண்டியது என்ற இலட்சியத்தின் எல்லை என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து த்வய மந்திரத்தின் பிற்கூற்றில் முதல் பதமான “ஸ்ரீமதே” என்ற பதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் (ஒம் நமோ நாராயணாய) மூன்றாவது பதமான நாராயணாய என்ற பதத்திலும் அடியார் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியும் பெருமாளுமான இருவரும் என்பது மறைத்துச் சொல்லப்பட்டது. மறைத்துச் சொன்ன அதைத் த்வய மந்திரம் விளக்குகிறது. “இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்தித்திருக்கிறது” என்று பிள்ளை லோகாச்சாரியார் அருளிச் செய்ததை இங்கு மேற்கோளாகக் காணலாம். “பகவத் கைங்கர்யமே ஒருவன் பெற வேண்டிய லட்சியம்” என்பது திருமந்திரத்திலும் த்வய மந்திரத்திலும் சொல்லப்படுகையாலே தெளிவாகும்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று கூறினார் அன்றோ ஆழ்வார்.

உளம் தெளிந்து:- மேற்கூறிய ஆன்மா பெறும் பயனாக கைங்கர்யத்தில் மனம் தெளிவடைந்து அதாவது வேறு வேறு பயன்களை விரும்புவதற்குக் காரணமான “யான்” “எனது” என்ற இரண்டு குற்றங்களைக் களைய வேண்டும். செய்யும் தொண்டுகள் அவன் உகப்புக்காகவே அமைய வேண்டும். இக்கருத்துக்களை ‘தனக்கே ஆக எனைக் கொள்ளுமீதே’ என்று நம்மாழ்வாரும் ‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று ஸ்ரீஆண்டாளும் அருளிச் செய்த பாசுரங்கள் கூறுகின்றன. கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் என்று சொல்வதற்குத் தக்கபடி இதயம் தெளிவடைந்து செய்ய வேண்டும். இதனால் த்வய மந்திரத்தின் பின் கூற்றில் இறுதிப்பதமான நமப் பதத்தின் பொருள் சொல்லப்பட்டது.

பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேரென்றிருப்பார் – அதாவது இக் கைங்கர்யமாகிற பெரும் பயன் கிடைத்தால் ‘இதைக் காட்டிலும் மேலான ஒரு பயன் இல்லை என்று கைங்கர்ய்மாகிற பயனையே மேலான பயனாக எண்ணியிருக்குமவர்கள் என்கை. “பரமபதம்” என்கிற இடம் என்றைக்கும் அழியாமல் ஒரே மாதிரியாக இருப்பது. சுத்த சத்வமயமானது. ஞான ஆனந்தங்களுக்கு உற்பத்தி நிலம். அதனால் கைங்கர்யமாகிற பயன் தடையில்லாமல் செய்வதற்கு ஏற்றது. இக்காரணங்களால் அதை ஞானிகள் விரும்புகிறார்கள். ஆகையால் கைங்கர்யத்திற்கு மேல் வேறு பயன் உண்டோ என்று சொல்வதில் எவ்வித தடையுமில்லை. இத்தகைய உயர்ந்த கைங்கர்யத்தில் உறுதியாகயிருக்கும் ‘அவர்கள்’ என்று பொருள்.

அரும்பேறு வானத்தவர்க்கு – கீழ்ச்சொன்ன அடியவர்கள் இயல்பாகவே தங்களை இறைவனுக்கு அடியவராக எண்ணியிருப்பவர். பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர். இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார். இவர்கள் பரமபதம் சென்றால் அங்குள்ள நித்ய சூரிகள் முதலானார்களுக்கும் கிடைத்தற்கரிய பொருளாகக் கொண்டாடுவதற்கு உரியவர்கள் ஆவார். இதனால் எப்பொழுதும் ஆரா அமுதமான பகவானையே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அப்பகவத் விஷயத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் இவர்களுடைய அனுபவம் பெறாப் பேறாக நினைத்து அனுபவிக்கப்படுவார்கள் என்பது கருத்து.

Leave a Comment